நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருந்தது. இந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி ராவல் பிண்டி மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில், பாதுகாப்பு எச்சரிக்கை காரணமாக அந்த போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், நியூசிலாந்து அரசு விடுத்த பாதுகாப்பு எச்சரிக்கையை அடுத்து போட்டித்தொடர் முழுமையாக ரத்து செய்த நியூசிலாந்து அணி நாடு திரும்பியது. முன்னதாக, நியூசிலாந்து அணி 18 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு விளையாடச் சென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பாதுகாப்பு எச்சரிக்கை எதிரொலியாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தற்போது அக்டோபரில் திட்டமிடப்பட்டிருந்த பாகிஸ்தானுடனான சுற்றுப்பயணத்தை ரத்து செய்துள்ளது.
இது குறித்த அறிவிப்பை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் “அக்டோபர் மாதத்தில் பாகிஸ்தானுடனான சுற்றுப்பயணத்திலிருந்து இரு குழுக்களையும் (ஆண்கள் மற்றும் பெண்கள் அணி) திரும்பப் பெற வாரியம் தயக்கத்துடன் முடிவு செய்துள்ளது என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும்.” என்றுள்ளது.