சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கும் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு, கொரோனா விதிமுறைகளை மீறி, நடைபெற்று வந்த நிலையில் அங்கு பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. அதனையடுத்து, அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு படப்பிடிப்பு தளத்திற்கு நேற்று சீல் வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரியாலிட்டி ஷோக்கள், நாடகங்கள் என பல நிகழ்ச்சிகள் செம்பரம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் ஒளிப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் மே 31-ம் தேதி வரை, தொலைக்காட்சி மற்றும் சினிமா படப்பிடிப்புகள் நடக்காது என பெப்சி தொழிற்சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்து இருந்தார்.
ஊரடங்கு அமலில் இருப்பதாலும், அங்கு ஏற்கனவே சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாலும் படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அங்கு பணியில் இருந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், படப்பிடிப்புக்கு தடை தொடர்கிறது. இந்த நிலையில், படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுவதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில், காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்து, ஊரடங்கு விதிகளை மீறிய காரணத்திற்காக பிக்பாஸ் படப்பிடிப்புக்கு சீல் வைத்துள்ளனர். மேலும், ஈவிபி ஃபிலிம் சிட்டியின் மூன்று நுழைவாயில்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக கூறி மாவட்ட கலெக்டர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கலந்தாலோசித்து, பிக்பாஸ் செட்டிற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சீல் வைக்கும் பிரத்யேக காட்சி :
பிக்பாஸ் அரங்கினுள் எவிக்சன் போக, நேற்றுடன் 95 நாள் படப்பிடிப்புகளை கடந்து இறுதி நாள் போட்டிக்காக 7 பிரபலங்கள் காத்திருந்தனர். இந்த நிலையில், அவர்கள் அனைவரும், கொரோனா பாதுகாப்பு கவச உடையுடன் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.